திருமுறை தந்த நாயகன் - நம்பியாண்டார் நம்பியின் வரலாறு

சில ஆலயங்களில் இன்னும் தேவாரம் ஒலிக்கக் காரணமாக இருந்தவர் நாயன்மார்களில் ஒருவரான நம்பியாண்டார் நம்பி ஆவார். சைவ சமயத்தைச் சார்ந்த இவருக்கு சிறு வயதிலேயே விநாயகர் காட்சி அருளிய புனித ஸ்தலம் திருநாரையூர் ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் ஆலயம் ஆகும்.

ராஜராஜ சோழனின் திருமுறைகளைத் தேடும் பணிகளில் நம்பியாண்டார் நம்பியின் பங்கு மிகவும் பெரிது. நம்பியாண்டார் நம்பி, பொல்லாப்பிள்ளையாரின் அருளால் தில்லையில் (சிதம்பரம்) புதைந்து கிடந்த பொக்கிஷமான திருமுறைகளைக் கண்டறிந்து, ராஜராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க நமக்குத் தொகுத்து அளித்துள்ளார்.

திருமுறைகளை உலகிற்கு அறியச் செய்த 'திருமுறை நாயகன்' ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாரை ஆலயம் சென்று வணங்கி வர முன்னோர்களின் ஆற்றலும், தாய் தந்தையரின் ஆசியும் கிடைத்து வாழ்வில் அனைத்துச் செயலிலும் வெற்றி உண்டாகும்.

அவரவர் பிறந்த நட்சத்திர நாளிலோ அல்லது புனர்பூச நட்சத்திர நாளிலோ சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது.

திரிகோணம் பாவங்களை இயக்கும் விநாயகர் வழிபாடு & கேது தோஷ நிவர்த்தி

நாம் வாழ்வில் பூர்வ புண்ணிய கர்மாக்களுக்கு ஏற்றவாறு பிறப்பெடுத்து இருக்கிறோம். அந்த கர்ம வினையை நீக்கும் ஆற்றல் விநாயகப் பெருமானுக்கு உண்டு. நாம் செய்யும் செயல்களில் தடை ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் நாம் முற்பிறவியில் செய்த வினைகளே ஆகும். அந்தத் தடை ஏற்படுத்துபவரும் அவரே (கேது), அதை நிவர்த்தி செய்பவரும் அவரே ஆவார்.

கிரகங்களின் தோஷத்தை நீக்குபவர் விநாயகர். கிரகங்களில் கேது பகவானுக்கு பலம் அதிகம். அவருக்கு அதிபதியான விநாயகப் பெருமானை வணங்க பிறப்பெடுத்த கர்ம வினைகள் நீங்கும்.

அதனால் தான் கால புருஷ தத்துவப்படி மேஷம் (1-ஆம் பாவம் - ஜாதகர்), சிம்மம் (5-ஆம் பாவம் - பூர்வ புண்ணியம்/பித்ருக்கள்), தனுசு (9-ஆம் பாவம் - தந்தை/பாக்கியம்) ஆகிய கேது பகவானின் நட்சத்திரங்கள் முதலில் வருகின்றன. சிம்மத்தில் உள்ள மகம் பித்ருகளின் நிலையைச் சொல்லும்; தனுசில் உள்ள மூலம் தந்தையின் பாவ புண்ணியங்களைக் குறிக்கும்; மேஷத்தில் உள்ள அஸ்வினி ஜாதகரைப் பற்றிக் குறிக்கும்.

விநாயகரை அவரவர் பிறந்த கிழமைகளிலும் ஜாதகத்தில் கேது அமர்ந்த பாவகத்தின் அதிபதி கிழமையிலும் வணங்கி வர ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

சிம்மத்தில் உதித்த ஆனைமுகன் - ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி சிறப்பு

ஐந்தாவது ராசி சிம்மம் - ஆவணி மாதம் (தமிழ் ஐந்தாவது மாதம்). விநாயகப் பெருமானுக்கு 'ஐந்து கரத்தன்' என்ற பெயர் உண்டு. எனவே இந்த சிம்ம மாதத்தில் விநாயகருக்கு சிறப்பான மாதமாக விழாக்களை நம் முன்னோர்கள் அமைத்திருக்கிறார்கள்.

மேலும் சிம்ம ராசி வயிற்றைக் குறிக்கும் ராசியாகும். இந்த உலக உயிரினம் அனைத்தும் விநாயகரின் வயிற்றில் அடக்கம்.

எப்படி வணங்குவது?

எங்கும் இருப்பவர் விநாயகப் பெருமான். இவர் இல்லாத இடமே இல்லை; இவர் ஆலயம் இல்லாத இடமே இல்லை. இவரை குழந்தை குணத்துடன் நம்பியாண்டார் நம்பி போல் மனதார வழிபட வேண்டும்.

மஞ்சளை பிடித்து வைத்து அருகம்புல் வைத்து எளிமையாக வணங்க இவர் நம் துயரங்களை தீர்ப்பார்.

12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கணபதி மூர்த்திகள்

12 ராசிக்காரர்களும் தங்களுக்குரிய கணபதி மூர்த்தியை வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி உண்டாகும்:

  • மேஷம் - ஸ்ரீ பாலகணபதி
  • ரிஷபம் - ஸ்ரீ வித்யா கணபதி
  • மிதுனம் - ஸ்ரீ சக்தி கணபதி
  • கடகம் - ஸ்ரீ சித்தி கணபதி
  • சிம்மம் - ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி
  • கன்னி - ஸ்ரீ க்ஷிப்ர கணபதி
  • துலாம் - ஸ்ரீ விக்னராஜ கணபதி
  • விருச்சிகம் - ஸ்ரீ வர கணபதி
  • தனுசு - ஸ்ரீ ருணமோசன கணபதி
  • மகரம் - ஸ்ரீ ஹேரம்ப கணபதி
  • கும்பம் - ஸ்ரீ ஏகதந்த கணபதி
  • மீனம் - ஸ்ரீ தருண கணபதி