1. திதி என்றால் என்ன?
சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது திதி ஆகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒவ்வொரு 12° கோண வித்தியாசம் ஏற்படும் போதும் ஒரு திதி நிறைவடைகிறது.
ஒரு மாதத்தில் மொத்தம் 30 திதிகள் உள்ளன. அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
• வளர்பிறை (சுக்ல பக்ஷம்): அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமி வரை வரும் 15 திதிகள்.
• தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்): பௌர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை வரும் 15 திதிகள்.
இவ்வாறு 15 வளர்பிறை திதிகள் + 15 தேய்பிறை திதிகள் = மொத்தம் 30 திதிகள் கணக்கிடப்படுகின்றன.
பிறந்த திதியை ஏன் கவனிக்க வேண்டும்?
பஞ்ச அங்கத்தில் திதி என்பது ஜாதகத்தில் வாழ்வில் உறவுகளின் நிலைகள் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாகும். ஒருவர் பிறந்த நேரத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த நிலையில் இருந்தனர் என்பதை திதி காட்டுகிறது.
சந்திரன் பொதுவாக மனம், உணர்வு, நினைவாற்றல், மனநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையவர். சூரியன் ஆத்ம சக்தி, தனித்தன்மை, அதிகாரம், உயிர்சக்தி போன்றவற்றைக் குறிக்கிறார். எனவே, பிறந்த திதி என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையிலான பரஸ்பர உறவை வெளிப்படுத்துவது ஆகும்.
அதனால், ஜாதகத்தில் பிறந்த திதியைப் பார்க்கும்போது: சந்திரனின் நிலை + சூரியனின் நிலை + அவற்றின் பரஸ்பர உறவு ஆகியவற்றைச் சேர்த்து ஆராய்வது சிறந்த முறையாகும்.
- சந்திரன் பலமாக இருந்தால் மனநிலை தெளிவாகவும் நிலையாகவும் இருக்கும்.
- சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் மனதில் குழப்பம், உணர்ச்சி ஏற்றத்தாழ்வு போன்றவை இருக்கும்.
- சூரியனின் பலமும் அதன் நிலையும் வாழ்க்கையின் தனித்தன்மை மற்றும் ஆத்ம பலத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
கர்மா, பித்ரு கடன்கள் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம்
நம் வாழ்வில் எவ்வளவு சொத்து வசதி இருந்தாலும் அந்தந்த காலகட்டத்தில் நமக்கென நல்ல உறவுகள் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்வதற்கு அர்த்தம் இல்லை.
ஜாதகத்தில் பித்ரு காரகன் (தந்தை வழி) சூரியன் மற்றும் மாத்ருகாரகன் சந்திரன் (தாய் வழி) ஆவார். இவர்களில் பூர்வ புண்ணிய கர்மாவிற்கு ஏற்ப நாம் ஜனனம் எடுக்கிறோம். இந்த பாவ புண்ணிய கர்மாவை திதி நிர்ணயம் செய்கிறது.
அதனால் தான் ஆலயங்களில் திதி வழிபாடு முக்கியமாகச் செய்யப்படுகிறது. நம் முன்னோர்களுக்கும் சூரியன் சந்திரன் இணைந்த அமாவாசை நாளில் அவர்களை நினைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட பஞ்சாங்கத்தில் உள்ள திதியின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஆலய வழிபாடு செய்து வரும் போது நம் வாழ்வில் எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நல்ல உறவுகளுடன் மகிழ்வான வாழ்வு கிடைக்கும்.
பரிகாரம் மற்றும் ஆலய வழிபாட்டு முறைகள்
பரிகாரம் என்பது நாம் ஆத்மார்த்தமாகச் செய்தால் மட்டுமே முழுப் பலன் தரும். திதி வழிபாட்டு பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு முறை மட்டும் செய்வதல்லாமல் தொடர்ந்து செய்து வரும் போது நற்பலனைத் தரும்.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு ஆத்மார்த்தமாக பித்ரு பூஜை தர்ப்பணம் செய்து வருவது மிகவும் முக்கியமாகும்.
குறிப்பாக தட்சிணாயன காலத்தில் வரும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பானதாகும். இந்நாளில் முடிந்த வரை நீருடன் உணவு தானம் (அன்னதானம்) செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.
- பழமையான சிவாலயங்களில் அவரவர் பிறந்த திதி வரும் நாளில் தரிசனம் செய்து அன்னதானம் செய்வது சிறப்பு.
- அடுத்து வரும் பதிவில் திதி தோஷம் நீக்கும் சிறப்பான ஆலயங்களைப் பற்றிப் பார்ப்போம்.




